நிழல் நிஜமாகிறதா? பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் இப்போது புதுச்சேரி அரசியலிலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சசிகலா தலைமையிலான அணியுடன் கூட்டணி அமைக்கும் ராமதாஸின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்த முக்கிய நிர்வாகிகள், கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து குழப்பத்தில் இருந்தனர்.

இந்த அரசியல் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட அன்புமணி தரப்பு, தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, புதுச்சேரி மாநில பாமக அமைப்பாளர் கணபதி உள்ளிட்ட 5 முக்கிய நிர்வாகிகள் திடீரென அன்புமணியின் பக்கம் சாய்ந்தது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தன்னுடைய கோட்டையாகக் கருதப்படும் புதுச்சேரியிலேயே தனக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியது ராமதாஸை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், தனக்கு எதிராகவும் செயல்பட்டதாகக் கூறி கணபதி உள்ளிட்ட 5 பேரையும் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அதிரடி நடவடிக்கை பாமக தொண்டர்களிடையே பெரும் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தந்தை-மகன் இடையேயான அதிகாரப் போட்டி பகிரங்கமாக வெடித்துள்ளதால், வரும் தேர்தலில் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.