மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் நீடித்த தனது உரையில், ‘நான்’ என்ற வார்த்தையை 40 முறைக்கும் மேலாகப் பயன்படுத்தித் தன்னைத்தானே ஒரு மாபெரும் வீரனைப் போல டிரம்ப் புகழ்ந்து தள்ளியுள்ளார். “ஈரானின் அணுசக்தித் திட்டத்தை நான் தடுத்து நிறுத்தினேன், அவர்களின் ராணுவத்தை நான் அழித்தேன், வேறு எந்த அதிபரும் செய்யாத சாதனையை நான் செய்துள்ளேன்” எனத் தனது முதுகைத் தானே தட்டிக்கொண்டார்.
ஆனால், டிரம்ப் கூறும் இந்த ‘வெற்றித் தம்பட்டம்’ யதார்த்தத்திற்குப் புறம்பானது என அரசியல் விமர்சகர்கள் சாடுகின்றனர். டிரம்ப் தனது உரையில் ஈரானைக் கற்காலத்திற்குத் தள்ளிவிடுவேன் என மிரட்டல் விடுத்தாலும், அடுத்த 40 நிமிடங்களிலேயே ஈரான் 11 ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுத்துள்ளது டிரம்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் இந்தத் தற்பெருமைப் பேச்சு ஒருபுறமிருக்க, அமெரிக்காவிற்குள்ளேயே அவரது செல்வாக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஈரானுடனான போரினால் அமெரிக்கப் பொருளாதாரம் நலிவடைந்து வருவதால், டிரம்பிற்கான மக்கள் ஆதரவு 35 சதவீதமாகக் குறைந்துள்ளது.
சுமார் 75 சதவீத அமெரிக்கர்கள் நாட்டின் பொருளாதார நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். குடியரசுக் கட்சி வாக்காளர்கள் மத்தியிலும் டிரம்பின் மீதான நம்பிக்கை 14 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக டிரம்ப் பொய் கூறுவதாகவும், உண்மையில் அங்கிருப்பவர்கள் இன்னும் தீவிரமான போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
மொத்தத்தில், டிரம்பின் உரை ஒரு நாட்டின் அதிபரின் உரையாக இல்லாமல், தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரு சினிமா பாணிப் பிரச்சாரமாகவே இருந்ததாகப் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
