கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மைதானத்தில் பந்துகளைத் துவம்சம் செய்வது போல, நிஜ வாழ்க்கையில் தனது நண்பரை ஏப்ரல் ஃபூல் செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 1-ஆம் தேதியை முன்னிட்டு சச்சின் செய்த இந்த குறும்புத் தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன்னை அப்படியே அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் ஒரு நபரை (Lookalike) வைத்து இந்தத் திட்டத்தை சச்சின் அரங்கேற்றியுள்ளார்.

வீடியோவில், சச்சின் என்று நினைத்து அந்த நபர் அருகே சென்று அவரது நண்பர் கட்டிப்பிடிக்க முயல, அந்தப் போலி சச்சின் கோபப்படுவது போல நடிக்கிறார். இதனால் நிலைதடுமாறிப் போன நண்பர், உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பத்தில் உறைந்து நிற்கிறார்.

​சரியான நேரத்தில் உண்மையான சச்சின் சிரித்துக்கொண்டே பின்னாலிருந்து வெளியே வர, அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அந்த நண்பர் உணர்கிறார். “பிரியாணி தயாராகிவிட்டது” என வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ள சச்சின், தனது பிராங்க் திட்டம் கச்சிதமாக முடிந்துவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராகச் செயல்பட்டு வரும் சச்சின், இவ்வளவு பிஸியான நேரத்திலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இத்தகைய வீடியோக்களைப் பகிர்ந்து வருவது நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது. ஒரு கிரிக்கெட் ஜாம்பவானாகத் தெரிந்த சச்சினின் இந்த விளையாட்டுத்தனமான முகம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.