சமூக வலைதளங்களில் எத்தனையோ வினோதமான இடங்களின் வீடியோக்கள் வைரலாகும், ஆனால் ராஜஸ்தானில் உள்ள ஒரு ரயில் நிலையம் குறித்த இந்த வீடியோ ஒட்டுமொத்த இணையத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு ரயில் நிலையம் என்ற அடையாளமே இல்லாமல், வெறும் ஒரு டின் ஷெட் மற்றும் இரும்புத் தூண்கள் மட்டுமே உள்ளன. அங்கு சிக்னலோ, பிளாட்பார்மோ அல்லது அமர இருக்கைகளோ கூட கிடையாது.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அங்கு டிடிஇ (TTE) உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் கிடையாது. ஒரு பெரியவர் தனது பையில் டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு தினமும் அங்கு வருகிறார். வரும் ஒன்றிரண்டு பயணிகளுக்காகத் தனது பையிலிருந்து டிக்கெட்டை எடுத்து, அதில் சீல் குத்தி வழங்கிவிட்டுச் செல்கிறார்.
@seikhziyan என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்தப் பெரியவர் டிக்கெட் வழங்குவது மட்டுமல்லாமல், அங்கு வரும் பயணிகளுக்காகத் தினமும் குடிநீர் வசதியையும் செய்து தருகிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சிலர் “குறைந்தபட்சம் அமர ஒரு இருக்கையாவது போட்டிருக்கலாம்” எனக் கூற, மற்றவர்களோ “இவ்வளவு வசதி இல்லாத இடத்திலும் டிக்கெட் எடுத்துப் பயணம் செய்யும் அந்தப் பயணிகளையும், நேர்மையாக டிக்கெட் தரும் அந்தப் பெரியவரையும் பாராட்ட வேண்டும்” எனப் பதிவிட்டு வருகின்றனர். இது ஒரு ‘ஹால்ட்’ (Halt) ஸ்டேஷன் என்பதால் சிக்னல் கிடைத்தால் மட்டுமே அங்கு ரயில்கள் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
