திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம் வந்த சுந்தர் சி, தற்போது மதுரை மத்திய தொகுதியில் அதிமுக – புதிய நீதி கட்சி கூட்டணியின் வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் களம் இறங்கியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு மிகவும் முதிர்ச்சியுடன் பதிலளித்த சுந்தர் சி, “விஜய் சார் மீது எனக்குப் பெரும் மதிப்பும் அன்பும் உண்டு. என் மனைவி குஷ்பூ அவரை தம்பி என்றுதான் அழைப்பார், விஜய்யும் அவரை அக்கா என்றுதான் கூப்பிடுவார். எனவே, எந்தச் சூழலிலும் விஜய்யையோ அல்லது அவரது கட்சியையோ நான் விமர்சிக்க மாட்டேன்” எனத் திட்டவட்டமாகக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

​அரசியல் களத்தில் தனிப்பட்ட விமர்சனங்கள் மலிந்துள்ள நிலையில், சுந்தர் சி-யின் இந்த நாகரீகமான அணுகுமுறை சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதே சமயம், மதுரையில் தனது போட்டி உதயசூரியன் சின்னத்திற்கும் இரட்டை இலைக்கும் தான் என்பதைத் தெளிவுபடுத்திய அவர், வில்லிவாக்கத்தில் தவெக பிரச்சாரத்தில் நடந்த பாட்டில் வீச்சு சம்பவத்திற்குத் தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

வன்முறையைத் தவிர்க்கவே தன்னை போன்ற சாமானியர்கள் அரசியலுக்கு வருவதாகக் குறிப்பிட்ட சுந்தர் சி, ஒருபுறம் தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினாலும், மறுபுறம் திரையுலக நட்பைப் போற்றிப் பாதுகாப்பது பலரையும் கவர்ந்துள்ளது.