சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தற்போதைய விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சிலிண்டருக்குள் கேஸ்-க்கு பதிலாக தண்ணீர் நிரப்பப்பட்டு விநியோகம் செய்யப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
சமீபத்தில் ஒரு குடும்பத்திற்கு விநியோகம் செய்யப்பட்ட 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் எடை வழக்கத்தை விட அதிகமாக இருந்துள்ளது. பொதுவாக பெரும்பாலானோர் சிலிண்டரின் எடையைச் சரிபார்க்காமல் அப்படியே பெற்றுக்கொள்வது வழக்கம். ஆனால், இந்த குடும்பத்தினர் சந்தேகத்தின் பேரில் எடை இயந்திரத்தில் வைத்துப் பார்த்தபோது, சிலிண்டரின் எடை 22 கிலோவிற்கும் அதிகமாக இருந்துள்ளது.
எடை கூடுதலாக இருந்ததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சிலிண்டரின் வால்வை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதிலிருந்து எரிவாயு வருவதற்குப் பதிலாகத் தண்ணீர் பீய்ச்சி அடித்துள்ளது. சிலிண்டருக்குள் கேஸ்-க்கு பதிலாகத் தண்ணீரை நிரப்பி எடையை அதிகரித்து மோசடி செய்திருப்பது இதன் மூலம் அம்பலமானது. இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
"Water in LPG cylinder." 🔥😡
Corruption is at such a high level that gas agency managers are supplying water-filled cylinders to people. The government is still inactive and doing nothing against this loot. pic.twitter.com/SA8mPusfPb
— Mission Ambedkar (@MissionAmbedkar) March 29, 2026
இந்தச் சம்பவம் வெறும் ஏமாற்று வேலை மட்டுமல்லாமல், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். சிலிண்டருக்குள் இத்தகைய முறைகேடுகளைச் செய்வது எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு நிலவும் இந்தச் சூழலில், இத்தகைய மோசடிகள் நுகர்வோரை மேலும் கவலையடையச் செய்துள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சிலிண்டர் வாங்கும்போது அதன் எடையைச் சரிபார்ப்பதுடன், அதன் ‘சீல்’ (Seal) சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்த பின்னரே பெற்றுக்கொள்ள வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.
