ஐடி ஜாம்பவான் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் இந்தியாவில் பணியாற்றும் சுமார் 12,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாலை 5 மணிக்கே ஊழியர்களின் இன்பாக்ஸிற்கு வந்த “உங்களுடைய பணி இனி தேவையில்லை” (Redundant) என்கிற ஒற்றை இமெயில், பலரது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

உலகளவில் சுமார் 30,000 ஊழியர்களை (மொத்த பணியாளர்களில் 18%) அந்நிறுவனம் நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எச்.ஆர் அல்லது மேலாளர்கள் என யாரிடமிருந்தும் எந்த முன்னறிவிப்பும் இன்றி, இமெயில் வந்த சில நிமிடங்களிலேயே நிறுவனத்தின் உள்நுழைவு அனுமதியும் (Internal Access) ரத்து செய்யப்பட்டுள்ளது ஊழியர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்வதற்காகவும், நிறுவனத்தைச் சீரமைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரக்கிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குப் பணிக்காலத்திற்கு ஏற்ப இழப்பீடு மற்றும் நோட்டீஸ் கால சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், அவை ‘தன்னார்வ ராஜினாமா’ செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்கிற நிபந்தனை கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஒரு மாதத்திற்குள் மற்றொரு கட்ட பணிநீக்கம் இருக்கலாம் என்கிற அச்சமும் ஐடி ஊழியர்களிடையே நிலவி வருகிறது. அமேசான் போன்ற நிறுவனங்களைத் தொடர்ந்து ஆரக்கிளும் இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பது, டெக் துறையில் நிலவும் பொருளாதார மந்தநிலையை உறுதிப்படுத்துவதாக உள்ளது.