ராஞ்சியைச் சேர்ந்த ஆயுஷி சிங் என்ற பெண், கடந்த மார்ச் 27 அன்று வாரணாசி – தியோகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (22500) ரயிலில் பயணம் செய்தபோது வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்டதால், தனக்குக் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகப் புகார் தெரிவித்துள்ளார். அந்த உணவைச் சாப்பிட்ட பிறகு தனக்கு உயிருக்கு ஆபத்தான அலர்ஜி ஏற்பட்டதாகவும், தனது இரண்டு வயது மகனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான ஆதாரங்களையும், மருந்துச் சீட்டையும் பகிர்ந்துள்ள அவர், ரயிலில் வழங்கப்பட்ட தண்ணீர் கூட விசித்திரமான சுவையுடன் இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் ரயில்வே ஊழியர்கள் அலட்சியமாக நடந்துகொண்டதாக அந்தப் பெண் சாடிய நிலையில், ஐஆர்சிடிசி (IRCTC) இதற்கு அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. “மார்ச் 27 அன்று வழங்கப்பட்ட மதிய உணவு முறையாகச் சோதிக்கப்பட்டது, அதில் எந்தக் குறையும் இல்லை; தரம் திருப்திகரமாகவே இருந்தது” என்று தெரிவித்துள்ளது.
மேலும், அன்றைய தினம் அந்த ரயிலில் பயணித்த வேறு எந்தப் பயணியிடமிருந்தும் உணவின் தரம் அல்லது சுகாதாரம் குறித்து இது போன்ற புகார்கள் வரவில்லை என்றும் ஐஆர்சிடிசி திட்டவட்டமாகக் கூறியுள்ளது. பிரீமியம் ரயிலான வந்தே பாரத்தில் நடந்த இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
