மும்பை மலாட் கிழக்கு பகுதியில் உள்ள ‘சஹாரா வடா பாவ்’ கடையில், வெறும் பணப் பிரச்சனைக்காக வாடிக்கையாளர் ஒருவர் கடை உரிமையாளரின் விரலைக் கடித்துத் துப்பிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு 8:30 மணியளவில் சிவாஜி சவுக் அருகே உள்ள அந்தக் கடைக்கு வந்த லக்ஷ்மிதர் மங்கள் மாலிக் என்ற நபர், சமோசா மற்றும் கட்லெட் ஆர்டர் செய்துள்ளார்.

சாப்பிட்டு முடித்த பிறகு பில் தொடர்பாக கடை உரிமையாளரின் மகனுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பணத்தை ஆன்லைனில் செலுத்தியதாகக் கூறப்பட்டாலும், அந்தத் தகராறு கைக்கலப்பாக மாறியுள்ளது.

சத்தம் கேட்டு வந்த கடை உரிமையாளர் ரஞ்சித் ஹரிவன்ஷ் சிங் (40), அந்த நபரைச் சமாதானப்படுத்தி வெளியேறச் சொன்னபோது, ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் அவரைத் தாக்கியுள்ளார்.

அந்த மோதலின் போது, ரஞ்சித்தின் வலது கை நடுவிரலை அந்த நபர் மிகக் கொடூரமாகக் கடித்ததில், விரலின் நுனிப்பகுதி துண்டானது. பலத்த காயமடைந்த ரஞ்சித் தற்போது மும்பை கெம்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் ஈடுபட்ட நபரை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரைக் கைது செய்துள்ளனர். ஒரு சிறிய பில் தொகைக்காக இவ்வளவு பெரிய வன்முறை நடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.