தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தமக்கு 39.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும் ஐந்து லட்சம் ரூபாய் கடனும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமக்குச் சொந்தமாக வீடு இல்லை என்று தெரிவித்துள்ள சீமான் தனது மனைவி கயல்விழி பெயரில் 3.44 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் இருப்பதாகவும் கையில் 50000 ரூபாய் ரொக்கம் மற்றும் 150 கிராம் தங்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அவரது மனைவி பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25.45 ஏக்கர் நிலம் 50.9 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஒரு சதுர அடி நிலம் வெறும் 4 ரூபாய் 59 காசுகளுக்கு எங்கு விற்பனை செய்யப்படுகிறது எனப் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் சீமான் மீது நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களும் வெளியாகியுள்ளன. சீமான் மீது தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றில் பெரும்பாலானவை அவதூறு பேச்சு மற்றும் அனுமதியின்றிப் போராட்டம் நடத்தியது தொடர்பானவை என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகத் தந்தை பெரியார் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாகச் சேலம் மாவட்டத்தில் மட்டும் நான்கு காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் இந்த முறை காரைக்குடியில் களம் காண்பதுடன் அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.