தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 31) தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வேட்பாளர்கள் உற்சாகத்துடன் மனுத் தாக்கல் செய்தனர்.
பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சங்கரநாராயணன், மாட்டுவண்டியில் ஊர்வலமாக நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மோனிகா ராணாவிடம் தனது வேட்புமனுவை அளித்தார். நெல்லையில் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த தளபதி முருகன் என்பவர் போட்டியிட வந்தார். அவர் தனது வைப்புத் தொகையான ரூ. 5,000-த்தை முழுவதும் 5 ரூபாய் நாணயங்களாக மூட்டையில் கட்டி எடுத்து வந்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதனை எண்ணுவதற்கு அதிகாரிகள் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர்.
அதேபோல், நெல்லை தொகுதியில் போட்டியிட வந்த கருஞ்சிறுத்தை மக்கள் இயக்க நிறுவனர் அதிசய பாண்டியன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்பதைக் குறிக்கும் வகையில் ஒருவருக்கு மாலை அணிவித்து, பாடை கட்டித் தூக்கி வந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, விதிமுறைப்படி வேட்பாளர் உட்பட 5 பேரை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.
இதற்கிடையே, பொதுமக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் செயல்பட்டது மற்றும் அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற புகார்களின் அடிப்படையில், அதிசய பாண்டியன் மீது பாளையங்கோட்டை போலீசார் பதிவு செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 6-ஆம் தேதி கடைசி நாளாகும். வரும் நாட்களில் முக்கியக் கட்சி வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ய உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
