தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து பிரச்சாரத்தைத் தொடங்கினார். இருப்பினும் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரப் பயணம் கடும் குளறுபடிகளுக்கு உள்ளானது.

கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தைக் கையாள முடியாமல் தவித்த தன்னார்வலர்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய தலைவரின் வாகனம் என ஒட்டுமொத்தப் பிரச்சாரமும் பாதியிலேயே முடங்கியது. இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த விஜய் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் நேரமின்மை காரணமாக மாலை நேரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில் ஒவ்வொரு நிமிடமும் வீணடிக்கப்படுவது கட்சி வேட்பாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய கசப்பான அனுபவத்தைத் தொடர்ந்து இன்றைய பிரச்சார அட்டவணை எவ்விதத் திட்டமும் இன்றி வெற்றுத் தாளாகவே இருப்பதாகத் தெரிகிறது. கட்சி நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுவதால் விஜய்யின் பிரச்சாரப் பணிகளில் அவர்களால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

அரசியல் வியூகங்களை வகுப்பதைக் காட்டிலும் தலைவரின் பிரச்சாரம் தடையின்றி நடப்பதை உறுதி செய்வதே இவர்களது முதல் கடமையாக இருக்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மின்னல் வேகத்தில் சுழலும் மற்ற கட்சிகளுக்கு இணையாகத் தமிழக வெற்றிக் கழகம் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் நிர்வாகக் குறைபாடுகளால் பிரச்சாரம் முடங்கி விஜய் வீட்டிலேயே முடங்கியிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.