தமிழக மக்கள் தற்போதைய சூழலில் பெரும் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். மேலும், தமிழக அரசியல் குறித்துத் தெரியாமல் நடிகர் விஜய் கனவு உலகில் மிதப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது,

தமிழக மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றனர். குறிப்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தைப் போன்ற ஒரு நிர்வாகத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மிகவும் வலிமையாக உள்ளது. ஊழல் கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் ஒன்றிணைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டணியை வீழ்த்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். பெண்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பினருக்குமான ஒரு சிறந்த ஆட்சியை நாங்கள் வழங்குவோம்.

தமிழகத்தைப் பற்றியோ அல்லது தமிழக மக்கள் குறித்தோ எந்தப் புரிதலும் இல்லாமல் நடிகர் விஜய் பேசி வருகிறார். அவர் முற்றிலும் ஒரு கனவு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அண்மைக் காலங்களில் நடிகர் விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தொடங்கிய கட்சிகளுக்கு 2 அல்லது 3 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. அதே நிலைதான் விஜய்க்கும் ஏற்படும். அவர் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை மட்டுமே பெறுவார்.

இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.