ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மூத்த சகோதரர் முகமது தஹிர் அன்வர், பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தகவலின்படி, தஹிர் அன்வர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் செயல்பாடுகளில் மிகத் தீவிரமாகப் பங்காற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் பஹவல்பூர் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தில் தஹிர் அன்வரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் சமூக ஊடகப் பதிவுகளும் இந்த மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளன. “மௌலானா மசூத் அசாரின் மூத்த சகோதரர் ஹக்கீம் முகமது தஹிர் அன்வர், அல்லாஹ்வின் விருப்பப்படி காலமானார்” என்று அந்த அமைப்போடு தொடர்புடையவர்கள் பதிவிட்டுள்ளனர். பஹவல்பூர் இரயில் நிலையம் அருகே உள்ள ஜாமியா உஸ்மான் வா அலி பகுதியில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத அமைப்பின் முக்கியப் புள்ளி ஒருவரின் மர்ம மரணம் என்பதால், இந்தியப் பாதுகாப்பு முகமைகள் இந்தச் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. இது இயற்கையான மரணமா அல்லது ஏதேனும் உட்கட்சி மோதலா என்ற கோணத்திலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.