மேற்குவங்க மாநிலத்தில் அடுத்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி புருலியா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிக்கும் என்று குற்றம் சாட்டினார்.
மக்கள் தங்களுக்குப் பிடித்தமான கோழி, ஆடு மற்றும் மீன் உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிட முடியாத நிலை ஏற்படும் என்றும், பாஜகவிற்கு மக்களின் மதம் மற்றும் கலாசாரத்தின் மீது நம்பிக்கை கிடையாது என்றும் அவர் கடுமையாகச் சாடினார். மம்தா பானர்ஜியின் இந்தக் குற்றச்சாட்டுக்குத் திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சஹா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் மீன் உள்ளிட்ட உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்றது என்று அவர் பதிலடி கொடுத்தார். குறிப்பாகத் திரிபுரா மாநிலத்தில் அதிக அளவில் மீன்கள் உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், மம்தாவின் கருத்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சி என்று குறிப்பிட்டார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் தலைவர்களிடையே உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த விவாதங்கள் மேற்குவங்கத்தில் தற்பொழுது சூடுபிடித்துள்ளன.
