மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் 29-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள் (Underground Missile Cities) குறித்த ‘பகீர்’ தகவல்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளைத் திணறடித்துள்ளன.
சுமார் ஒரு மாத காலமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய சரமாரித் தாக்குதல்களில், ஈரானின் ஏவுகணைக் கையிருப்பில் வெறும் 33 சதவீதம் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 67 சதவீத ஆயுதங்கள் மலைகளுக்கு அடியிலும், 500 மீட்டர் ஆழம் கொண்ட பாதாள நகரங்களிலும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய யாஸ்த் (Yazd) நிலத்தடி வளாகம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கண்காணிக்கும் கெஷ்ம் தீவுத் தளம் போன்றவை அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளுக்கே சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஈரானின் இந்த ‘பாதாள உலக’ சக்தி குறித்துப் பேசிய இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) தளபதி அமீர் அலி ஹஜிசாதே, “ஈரானிடம் உள்ள ரகசியத் தளங்களை வாரந்தோறும் ஒவ்வொன்றாக வெளிப்படுத்தினாலும், அந்தப் பட்டியலை முடிக்கவே இரண்டு ஆண்டுகள் ஆகும்” என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ஃபதா, கொர்ரம்ஷஹர் மற்றும் சுல்பிகார் போன்ற அதிபயங்கர ஏவுகணைகள் நகரும் லாரிகள் மூலம் சுரங்கங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் ஏவப்படும் நிலையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ள சூழலில், ஈரானின் இந்த மறைமுக ராணுவ பலம் டிரம்பிற்கு ஒரு மிகப்பெரிய வியூகச் சவாலாக (Strategic Challenge) உருவெடுத்துள்ளது.
