மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் 29-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாக ஈரானுக்கு ஆதரவாகப் போர்க்களத்தில் குதித்துள்ளது உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், தற்போது ஹூதி அமைப்பினர் செங்கடல் பகுதியில் உள்ள பாப்-எல்-மண்டேப் (Bab-el-Mandeb) ஜலசந்தியையும் மூடிவிடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் அல்லது அமெரிக்காவிற்கு ஆதரவாகப் புதிய நாடுகள் எவையேனும் போரில் நுழைந்தால், தாங்கள் நேரடியாகத் தாக்குதலில் ஈடுபடுவோம் என ஹூதிகள் விடுத்துள்ள மிரட்டல், அரேபிய தீபகற்பத்தில் ஒரு புதிய போர்முனை திறக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. ஏமனின் பீர்ஷேபா நகர் அருகே ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதை ஈரானிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது, இது போரின் தீவிரத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஹூதி கிளர்ச்சியாளர்களின் இந்த அதிரடி முடிவால் சர்வதேச வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகின் ஒட்டுமொத்த கடல்வழி வர்த்தகத்தில் பாதியளவு நடைபெறும் பாப்-எல்-மண்டேப் ஜலசந்தி மூடப்பட்டால், ஐரோப்பிய நாடுகள் மிக மோசமான பொருளாதாரச் சரிவைச் சந்திக்க நேரிடும்.
ஏற்கனவே கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் தவித்து வரும் உலக நாடுகளுக்கு, ஹூதிகளின் இந்தத் தலையீடு ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போல அமைந்துள்ளது. ஒருபுறம் ஈரானின் பாதாள ஏவுகணை நகரங்கள், மறுபுறம் ஹூதிகளின் கடல்வழித் தாக்குதல் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இருமுனைத் தாக்குதலைச் சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஏப்ரல் 6-ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் விதித்த கெடு முடிவடைய உள்ள நிலையில், ஹூதிகளின் இந்த என்ட்ரி போரின் போக்கை யாருமே கணிக்க முடியாத திசைக்குக் கொண்டு சென்றுள்ளது.
