ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. பெங்களூருவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் தொடக்கப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஸ்டார்க் வேண்டுமென்றே தொடரிலிருந்து விலகுகிறார் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் இன்று உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது உடல்நிலை மற்றும் காயம் குறித்து ஸ்டார்க் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆஸ்திரேலிய கோடைகால கிரிக்கெட் தொடரின் போது எனது தோள் மற்றும் முழங்கை பகுதியில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தை நான் அப்போது உணரவில்லை. தற்போது அதற்கான மறுவாழ்வு சிகிச்சையில் உள்ளேன். இந்தக் காயம் சரியான நேரத்தில் ஏற்படவில்லை என்பது எனக்குத் தெரியும். இது டெல்லி அணியின் திட்டங்களைப் பாதிக்கும் என்பதால், அதற்காக அணியிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
தவறான தகவல்களைப் பரப்புவோர் குறித்து அவர் கூறுகையில், “என்னைவிட எனது உடலைப் பற்றித் தங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும் என்று கருதி, சில இந்திய ஊடகவியலாளர்கள் தவறான தகவல்களை உண்மைகளைப் போலச் சித்தரித்து வருகின்றனர். வீரர்கள் குறித்து இத்தகைய தவறான கருத்துகளைப் பரப்புவது வருத்தமளிக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட ஆவலுடன் இருந்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக காயம் தடையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் முழுத் தகுதியுடன் அணியில் இணைவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த ஏலத்தில் பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட மிட்செல் ஸ்டார்க் இல்லாதது, டெல்லி அணியின் பந்துவீச்சு பலத்தை ஆரம்பக் கட்டத்தில் சற்று குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டெல்லி அணி தனது முதல் போட்டியில் விளையாடத் தயாராகி வரும் நிலையில், ஸ்டார்க்கிற்குப் பதிலாக மற்றொரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை ஆடும் லெவனில் சேர்க்க அணி நிர்வாகம் தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
