இந்திய அணியின் முன்னாள் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங், கிரிக்கெட் வீரர்களின் ஓய்வு குறித்துப் பேசியுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
எப்போதும் ஒளிவுமறைவின்றிப் பேசும் குணம் கொண்ட யோகராஜ் சிங், இம்முறை வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் பெண்களை மையப்படுத்திச் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், வீரர்கள் தங்கள் கேரியரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர்களது மனைவிகளே முக்கியக் காரணம் என்று யோகராஜ் சிங் சாடியுள்ளார்.
இது குறித்த அவர் கூறும் போது, இந்தியாவில் 40 வயதானாலே தங்களுக்கு வயதாகிவிட்டதாகப் புலம்புகிறார்கள். பெண்கள் 30 வயதைத் தொட்டாலே, உடல்வாகு மாறிவிட்டதாகவும், குழந்தைகள் வளர்ந்துவிட்டதாகவும் கூறி முடங்கிவிடுகிறார்கள். வீட்டில் இருக்கும் மனைவிகள் தான் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்குகிறார்கள். ‘ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது, குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளுங்கள்’ என அவர்கள் கூறுவதாலேயே வீரர்கள் ஓய்வு முடிவை எடுக்கிறார்கள்.
மேலும், “ஒரு வீரரின் லட்சியப் பயணத்திற்கும், அவருக்கும் இடையில் பெண்கள் குறுக்கே வரக்கூடாது. புனிதர்களுக்கும் வீரர்களுக்கும் மதம் கிடையாது, அவர்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள்” என்று அவர் தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஓய்வு குறித்த பேச்சுக்களுக்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். “அவர்கள் இன்னும் இளைஞர்கள் தான். இப்போது ஓய்வு பெற நினைப்பது வருத்தமளிக்கிறது. நீங்கள் தான் சிறந்தவர்கள் என்பதையும், உங்களை அணியிலிருந்து நீக்க முடியாது என்பதையும் உலகுக்கு நிரூபிக்க வேண்டும். 50 வயதானாலும் இரட்டைச் சதம் அடித்தால், உங்களை யாரால் நீக்க முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே நேரத்தில், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தோனி தனது கட்டுக்கோப்பான உடல் தகுதியை நிரூபித்துள்ளார். அவர் இன்னும் 10 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டும்.
அவரது பிட்னஸ் அபாரமாக உள்ளது. அவரை ஓய்வு பெறச் சொல்ல மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று தோனிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
மேலும் வயது என்பது ஒரு வெறும் எண்களே என்றும், திறமை இருக்கும் வரை வீரர்கள் விளையாட வேண்டும் என்றும் யோகராஜ் சிங் வலியுறுத்தியுள்ள போதிலும், பெண்கள் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது கடும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன.
