இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் பிரம்மாண்டத்திற்கு முன்னால் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) எடுபடவில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், வீரர்கள் மட்டுமின்றி வர்ணனையாளர்களும் பிஎஸ்எல் ஒப்பந்தத்தை முறிக்கத் தயங்குவதில்லை என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (PCB) பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் பிரபல இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் நைட் இடம் பெற்றிருந்தார். ஆனால், வெள்ளிக்கிழமை வெளியான ஐபிஎல் 2026-க்கான ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ வர்ணனையாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வர்ணனையாளர்கள் மட்டுமின்றி ஸ்பென்சர் ஜான்சன், தசுன் ஷானக மற்றும் பிளெசிங் முசராபானி போன்ற வீரர்களும் பிஎஸ்எல் தொடரை விட ஐபிஎல் தொடருக்கே முன்னுரிமை அளித்து இந்தியா விரைந்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியின் சில முடிவுகளே இந்த நிலைக்குக் காரணம் என விமர்சகர்கள் கருதுகின்றனர். அதாவது  கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்கள் ஒரே காலகட்டத்தில் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு ஒரே நேரத்தில் இரு தொடர்களும் நடக்கும்போது, உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் ஐபிஎல் தொடரையே தேர்வு செய்வார்கள் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது. தற்போது அந்த எச்சரிக்கை உண்மையாகியுள்ளது, பிஎஸ்எல் தொடரின் தரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அட்டவணை மாற்றமே இதற்குக் காரணம் என்பதை ஏற்க மொஹ்சின் நக்வி மறுத்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், “பிஎஸ்எல் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட பிறகு, வீரர்கள் ஐபிஎல் தொடருக்குச் செல்வது ஏமாற்றம் அளிக்கிறது. அட்டவணை குறித்து எங்களுக்குக் கவலையில்லை. ஆனால், பிஎஸ்எல் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு வெளியேறும் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நிதி பலம் மற்றும் செல்வாக்கிற்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் சூப்பர் லீக் திணறி வரும் நிலையில், மொஹ்சின் நக்வியின் இந்த பிடிவாதம் அந்நாட்டு கிரிக்கெட்டிற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என விளையாட்டு ஆர்வலர்கள் கருதுகின்றனர்.