பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு, அவருடைய மனைவி பொற்கொடி “தமிழக பகுஜன் சமாஜ் கட்சி” என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். பெரம்பூர் மற்றும் திரு.வி.க. நகர் பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர்.

இதற்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதால், அந்தப் பகுதியில் இவர்களது குடும்பத்திற்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இந்த நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பொற்கொடி திரு.வி.க. நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிட்டால், ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களின் வாக்குகளுடன் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியும் இணைந்து நிச்சயம் வெற்றி பெற முடியும் என அக்கட்சியினர் நம்புகின்றனர்.

இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் வெளியாக உள்ள வேட்பாளர் பட்டியலில் பொற்கொடியின் பெயர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.