சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மது அருந்துபவர்களின் வாக்குகள் தங்களுக்குத் தேவையில்லை என்றும், பொறுப்புள்ள குடிமக்களின் வாக்குகளே வேண்டும் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுமார் 2 கோடி பேர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதால், அவர்களின் வாக்குகள் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் மற்ற கட்சிகள் டாஸ்மாக் கடைகளை மூட முன்வருவதில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். ஒரு நாட்டின் எதிர்காலத்தைக் குடிகாரர்கள் தீர்மானிப்பது முறையல்ல என்றும், இது உண்மையான குடியரசு தானா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வரும் 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சீமானின் இந்த பேச்சு தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
