பெங்களூருவில் பெண் தாதா ஒருவருக்குக் காவல் ஆய்வாளர் ஆபாச குறுந்தகவல்கள் மற்றும் ஆடியோக்களை அனுப்பித் தொல்லை கொடுத்த சம்பவம், கர்நாடக காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரு கோனனகுண்டே காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் பாப்பண்ணா. இவர் மீது பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங்கிடம், ‘லேடி தாதா’ என்று அழைக்கப்படும் யசஷ்வினி கவுடா அதிரடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாருடன் அவர் சமர்ப்பித்துள்ள ஆடியோ மற்றும் வாட்ஸ்-அப் ஆதாரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. அந்த ஆடியோவில் இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா பேசியுள்ள சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் “யஷ் நீ என் தங்கம், பேபி… இரவு நேரத்தில் என் டென்ஷனை குறைக்க வா, நாம் உல்லாசமாக இருக்கலாம். என்னை இன்ஸ்பெக்டர் என்று அழைக்காதே, ‘பாப்பு’ என்று செல்லமாக அழை. அப்படி கூப்பிடவில்லை என்றால் உன் வீட்டுக்கு வந்து உதைப்பேன். மேலும், யசஷ்வினியிடம் கெஞ்சிக் கொஞ்சி முத்தம் கேட்கும் ஆபாச உரையாடல்களும் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து யசஷ்வினி கூறுகையில், “கடந்த 2017-ஆம் ஆண்டு என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டபோது அதிகாரியாக இருந்த பாப்பண்ணா, அன்று முதல் எனக்குத் தொல்லை கொடுத்து வருகிறார். இது பற்றி வெளியே சொன்னால் கூலிப்படையை ஏவி உன்னைக் கொன்றுவிடுவேன் என்றும், உன் பிள்ளைகளுக்குத் தீங்கு விளைவிப்பேன் என்றும் மிரட்டுகிறார். ஒரு போலீஸ் அதிகாரிக்கு அழகல்லாத வகையில் அவர் நடந்துகொள்கிறார். எனக்கே இந்த நிலை என்றால் சாதாரணப் பெண்களின் நிலை என்னவாகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா ஏற்கனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக இரண்டு முறை இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எழுந்துள்ள இந்தப் புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெற்கு பிரிவு காவல் துணை கமிஷனர் அனிதா ஹட்டன்னாவுக்கு, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பெண் தாதாவிற்கும், காவல் ஆய்வாளருக்கும் இடையிலான இந்த  விவகாரம் கர்நாடக அரசியலிலும், காவல் துறையிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.