ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண கர்நாடக மாநில எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 டிக்கெட்டுகளை மாநில கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயானந்த் காஷபனவர் கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயானந்த் காஷபனவர் கூறியதாவது, நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் (விஐபிக்கள்). எங்களால் பொதுமக்களைப் போல நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்க முடியாது. எம்.எல்.ஏ-க்கள் போட்டிகளைக் காண மைதானத்தில் தனி இருக்கை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். குறைந்தது தலா 5 டிக்கெட்டுகளாவது எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.

அரசாங்கத்திடமிருந்து நிலம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் வசதிகளையும் பெறும் கர்நாடக கிரிக்கெட் வாரியம், மக்கள் பிரதிநிதிகளை உரிய முறையில் மதிக்கத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கையை வாரியம் அலட்சியப்படுத்துவது முறையல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கை குறித்த செய்திகள் வெளியானவுடன், சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். “மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பிரதிநிதிகள், ஐபிஎல் டிக்கெட்டுகளுக்காகச் சலுகை கோருவது வேடிக்கையாக உள்ளது” என்றும், “விஐபி கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக இது அமையும்” என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே ஐபிஎல் டிக்கெட்டுகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், எம்.எல்.ஏ-வின் இந்தப் பிடிவாதமான கோரிக்கை கர்நாடக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.