பெங்களூரு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் அவரது தம்பியை 16 வயது சிறுவன் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பெங்களூரு அருகே உள்ள பகுதியில் வசித்து வருபவர் சாயா. இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், சாயாவிற்கும் ஏற்கனவே திருமணமான மல்லேகவுடா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இவர்களது கள்ளக்காதல் குறித்து மல்லேகவுடாவின் மனைவி யமுனாவிற்குத் (36) தெரியவந்தது. இது தொடர்பாக கணவரைக் கண்டித்தும் அவர் கேட்காததால், ஆத்திரமடைந்த யமுனா தனது தம்பி சுதீப்புடன் (34) சாயாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சாயாவிடம் தனது கணவருடனான கள்ளக்காதலைக் கைவிடும்படி கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது தாயுடன் யமுனா சண்டையிடுவதைப் பார்த்த சாயாவின் 16 வயது மகன், ஆத்திரத்தில் வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் யமுனாவைச் சரமாரியாக வெட்டிய அந்தச் சிறுவன், அதைத் தடுக்க வந்த சுதீப்பையும் வெட்டிச் சாய்த்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அக்காள், தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர்.
இந்தக் கொடூரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீனியா போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்துவிட்டுத் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட 16 வயது சிறுவனைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரு சிறுவன் இரட்டைக் கொலையில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
