இந்தியாவில் நிலவி வரும் தற்காலிக எரிபொருள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, நபர் ஒருவர் பைக்கில்லாமல் வெறும் பெட்ரோல் டேங்குடன் வந்து எரிபொருள் நிரப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்திய பெட்ரோலியச் சட்டம் 1934 மற்றும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின்வழிகாட்டுதலின்படி, பாட்டில்கள் அல்லது இதர கொள்கலன்களில் பெட்ரோல் வாங்குவதும் விற்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தீ விபத்துகளைத் தவிர்க்கவே இந்த விதிமுறை நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்த விதிகளைச் சுட்டிக்காட்டி அங்கு நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எச்சரித்தபோதும், அந்த நபர் அதனைப் பொருட்படுத்தாமல் பெட்ரோல் நிரப்பியுள்ளார்.
Petrol in bottles is banned and allowed only in bike tanks, so he just brought the tank without bike. 😂 pic.twitter.com/xVS1om4v9y
— Oppressor (@TyrantOppressor) March 26, 2026
குறிப்பாக, அந்த நபர் சட்டத்தில் உள்ள ஒரு ஓட்டையைப் பிடித்துவிட்டதாகக் கருதி அங்கிருந்த பொதுமக்கள் அதனைச் சிரித்துக்கொண்டும், கேலி செய்துகொண்டும் ஊக்கப்படுத்தியது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “பாட்டிலில் பெட்ரோல் தரமாட்டார்கள் என்பதால், பைக்கிலிருந்து டேங்க்கை மட்டும் கழற்றி வந்துள்ளார்” என இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்ச் சூழலால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளே இத்தகைய ‘பீதி கொள்முதல்’ நடவடிக்கைகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசைகள் காணப்பட்ட நிலையில், அதிகாரிகள் போதுமான கையிருப்பு இருப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இந்த நிலையில் சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சட்டத்தை மதிக்காத இத்தகைய நபர்களைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும். ஆபத்தான முறையில் எரிபொருள் நிரப்ப அனுமதித்த பெட்ரோல் பங்கின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இந்தியர்களின் பொது அறிவு மற்றும் பொறுப்புணர்வு இவ்வளவுதானா?” எனப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
