ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில், 5 மாதக் குழந்தை இடைவிடாமல் அழுததால் ஆத்திரமடைந்த தாய், குழந்தையின் வாய் மற்றும் மூக்கை அமுக்கிக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி மாவட்டம், சத்தியவேடு மண்டலத்திற்கு உட்பட்ட என்.ஆர். அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கும் ஹேமாவதி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 5 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருந்தனர். திருமணமான நாள் முதலே கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, இவர்களது 5 மாதக் குழந்தை திடீரென இடைவிடாமல் சத்தமாக அழுதுள்ளது. ஏற்கனவே குடும்பப் பிரச்சினைகளால் கடும் கோபத்தில் இருந்த ஹேமாவதி, குழந்தையின் அழுகைச் சத்தத்தைக் கேட்டு மேலும் ஆத்திரமடைந்துள்ளார். குழந்தையைச் சமாதானம் செய்வதற்குப் பதிலாக, அதன் அழுகையை நிறுத்த மனிதாபிமானமற்ற முறையில் குழந்தையின் வாய் மற்றும் மூக்கை தனது கைகளால் பலமாக அமுக்கியுள்ளார்.
தாயின் பிடியில் சிக்கிய அந்தப் பிஞ்சு குழந்தை, மூச்சு விட முடியாமல் சில நொடிகள் துடிதுடித்து, பின் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் மூச்சு நின்ற பிறகே ஹேமாவதி தனது பிடியை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பெற்ற குழந்தையையே கொலை செய்த ஹேமாவதியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஹேமாவதி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. பெற்ற தாயே தனது குழந்தையைக் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
