சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக அதிகரித்து வரும் வேளையில், இந்திய மக்களுக்கு ஒரு நிம்மதியான செய்தியை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை (Excise Duty) ஒன்றிய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.
இது குறித்து இன்று (மார்ச் 27) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் ஏற்படும் பாதிப்பு மக்கள் மீது விழக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்தியாவில் எரிபொருள் விநியோகம் போதிய அளவில் இருப்பதாகவும், மக்கள் எந்தவிதத் தட்டுப்பாட்டையும் சந்திக்க மாட்டார்கள் என்றும் உறுதி அளித்தார்.
சர்வதேச அளவில் நிலவும் விலை உயர்வுச் சூழலை மக்கள் மீது சுமத்தாமல் இருக்கவே இந்த வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார். பெட்ரோல், டீசல் விலை குறையும் என்ற இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
