கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையா, நல்ல நேரம் பார்த்துதான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் விமர்சித்திருந்தார். அடுத்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைக்குமோ என்ற கவலையில் அவர் இப்படி செய்ததாக அசோக் கேலி செய்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த சித்தராமையா, அரசாங்கத்தின் செயல்பாடுகள் மூடநம்பிக்கைகளைச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும், ராகு காலம் மற்றும் எமகண்டம் போன்ற நம்பிக்கைகளைத் தான் எப்போதும் மதிக்காதவன் என்றும் விளக்கமளித்தார். கடந்த காலங்களில் பலமுறை ராகு காலத்திலேயே பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதாகக் கூறிய சித்தராமையா, இந்த முறை தனது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே நேரத்தைக் கவனித்ததாகத் தெரிவித்தார். .
மேலும், உகாதி மற்றும் சிவராத்திரி போன்ற பண்டிகை நாட்களில் கூட தான் அசைவம் சாப்பிடுவேன் என்றும், தனக்கு எல்லா நாட்களும் ஒன்றுதான் என்றும் அவர் அதிரடியாகப் பேசினார். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையால் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்தே தவிர, தனிப்பட்ட முறையில் தனக்கு எந்தப் பயமும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
