அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் அனைத்தும் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
“நாங்கள் ஈரானின் விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைத் தளங்களைச் சுவடு தெரியாமல் அழித்துவிட்டோம்; இப்போது அவர்களுக்குப் பாதுகாப்பு என்று எதுவுமே இல்லை” என டிரம்ப் தனது பாணியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய சரமாரித் தாக்குதலில், ஈரானின் 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தகர்க்கப்பட்டதாகவும், இதனால் அந்த நாடு ராணுவ ரீதியாக நிலைகுலைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கியமாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழந்துவிட்டதால், இனி அந்த நாட்டால் எவ்விதப் பதிலடியும் கொடுக்க முடியாது என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“நாங்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டோம், இந்த போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டது” என முழங்கியுள்ள அவர், ஹார்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் எஞ்சியுள்ள மின் உற்பத்தி நிலையங்களும் தரைமட்டமாக்கப்படும் என்றும் 48 மணி நேரக் கெடு விதித்துள்ளார்.
ஈரானின் முக்கியத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அந்த நாட்டில் அதிகார மாற்றம் (Regime Change) ஏற்பட்டு வருவதாகவும், புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
