பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள அபூ மூசா (Abu Musa) மற்றும் துன்ப் (Tunb) ஆகிய தீவுகளைக் கைப்பற்றவோ அல்லது அங்கிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தவோ முயன்றால், அதற்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) முக்கியப் பகுதிகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, அமீரகத்தின் ராஸ் அல்-கைமா (Ras Al-Khaimah) பகுதியை இலக்காகக் குறிப்பிட்டுள்ள ஈரானின் உயர் ராணுவத் தலைமையகம், அத்துமீறல்கள் நடந்தால் “சுக்குநூறாக உடைக்கும் அளவுக்கு” (Crushing Blows) தாக்குதல் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்தத் தீவுகள் நீண்டகாலமாக இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சைக்குரிய இடங்களாக இருந்தாலும், தற்போது போர்ச் சூழல் நிலவுவதால் ஈரானின் இந்த அறிவிப்பு வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

​அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் மண்ணைப் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அந்தத் தாக்குதல் எங்கிருந்து தொடங்குகிறதோ அந்த இடத்தை ஈரான் தனது ஏவுகணைகளால் தரைமட்டமாக்கும் என எச்சரித்துள்ளது. ஏற்கெனவே ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்வதில் பெரும் சிக்கல் நிலவி வரும் நிலையில், ஈரானின் இந்த நேரடி மிரட்டல் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்த வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

ராஸ் அல்-கைமா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், எந்நேரமும் பதில் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் ஈரான் ராணுவத் தளபதிகள் கூறியிருப்பது போருக்கான அபாயத்தை அதிகரித்துள்ளது.