டெல்லியில் உள்ள 24, அக்பர் சாலை என்ற முகவரி கடந்த 48 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் அடையாளமாகத் திகழ்ந்தது. 1977-ல் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தபோது, இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்த ஜி.வெங்கடசாமி தனது அரசு பங்களாவை கட்சி அலுவலகமாக மாற்றிக் கொடுத்தார். இங்கிருந்துதான் இந்திரா காந்தி மீண்டும் எழுச்சி பெற்று ஆட்சியைப் பிடித்தார்.
ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமர்களாக இருந்த காலத்தில், நாட்டின் மிக முக்கியமான அரசியல் முடிவுகள் அனைத்தும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அலுவலகத்தில்தான் எடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஐ.டி.ஓ (ITO) அருகே உள்ள ‘இந்திரா பவன்’ என்ற புதிய கட்டிடத்திற்குத் தலைமையகம் மாற்றப்பட்டாலும், அக்பர் சாலை அலுவலகம் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில், அக்பர் சாலையில் உள்ள தலைமையகம் மற்றும் ராய்சினா சாலையில் உள்ள இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் ஆகியவற்றை வரும் மார்ச் 28-ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே 2015-ஆம் ஆண்டிலேயே இதற்கான ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்திருந்த நிலையில், இப்போது இந்தக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக தங்கள் அரசியல் பயணத்தின் மையப்புள்ளியாக இருந்த இந்த அலுவலகங்களைக் காலி செய்யச் சொல்லும் மத்திய அரசின் உத்தரவை காங்கிரஸ் தலைமை எதிர்த்து வருகிறது. அரசின் இந்தத் திடீர் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
ஏறத்தாழ அரை நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றைச் சுமந்து நிற்கும் அக்பர் சாலை அலுவலக விவகாரம் இப்போது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
