சென்னை திருவல்லிக்கேணியில், வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று கூறிக்கொண்டு வலம் வந்த நபர், அரசு வேலை மற்றும் கடைகள் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த புகாரில் ஐஸ்அவுஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவல்லிக்கேணியை சேர்ந்த திலகா (46) என்பவருக்கு, அவரது எதிர் வீட்டில் வசித்து வந்த துளசிராமன் (44) மற்றும் அவரது மனைவி அறிமுகமாகியுள்ளனர். அரசு உயர் அதிகாரிகளைத் தனக்குத் தெரியும் எனக் கூறி நம்ப வைத்த துளசிராமன், அரசு கடைகளை மலிவு விலையில் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பி திலகா மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு பல்வேறு தவணைகளாக ரூ.17.5 லட்சம் பணத்தை வழங்கியுள்ளனர். ஆனால், பல மாதங்களாகியும் கடை வாங்கித் தராமல் இழுத்தடித்த துளசிராமன், பணத்தைத் திரும்பக் கேட்டபோது திலகாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மெக்கானிக் பெர்னாட்ஷா (33) என்பவரிடமும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார் துளசிராமன். சென்னை மாநகராட்சியில் ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவரிடமிருந்து கடந்த 2022-ஆம் ஆண்டு ரூ.4 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், ஐஸ்அவுஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட துளசிராமன் மீது ஏற்கெனவே சில சர்ச்சைகள் உள்ளன. தன்னை ‘இளைய கட்டபொம்மன்’ என்றும், வீரபாண்டிய கட்டபொம்மனின் 8-வது வாரிசு என்றும் அடையாளப்படுத்திக் கொண்டவர். கடந்த மார்ச் 4-ஆம் தேதி, கட்டபொம்மன் வேடமணிந்த ஒருவரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அண்ணா அறிவாலயம் சென்ற இவர், திருத்தணி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விசாரணையில் புகார்கள் உண்மை எனத் தெரிந்ததையடுத்து, துளசிராமனை போலீஸார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மனைவியைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.