புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி என்று கருதப்பட்ட திமுக – காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தற்போது கடுமையான மோதல் வெடித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியால், மங்கலம், திருபுவனை, நெல்லித்தோப்பு, ராஜ்பவன், காலாப்பட்டு உள்ளிட்ட 5 முக்கியத் தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவருமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

​திமுகவுக்கு 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிடுவதாக முடிவானது. ஆனால், பல தொகுதிகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூடுதலாக மனு தாக்கல் செய்ததோடு, அவற்றை வாபஸ் பெறவும் மறுத்து வருகின்றனர். இந்த “இரட்டை வேட்பாளர்” சிக்கல் நீடிப்பதால், கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

​மறுபுறம், ஆளும் என்.டி.ஏ கூட்டணியில் ரங்கசாமி – பாஜக இடையே இருந்த குழப்பங்கள் தீர்க்கப்பட்டு அவர்கள் தேர்தல் களத்தில் வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் இந்த உட்கட்சிப் பூசல் தேர்தல் முடிவுகளைப் பாதிக்குமோ என்ற அச்சத்தில் தொண்டர்கள் உள்ளனர். மார்ச் 26-ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் என்பதால், அதற்குள் இந்த “நேரடி மோதல்” முடிவுக்கு வருமா என்பதே தற்போதைய பெரிய கேள்விக்குறி.