தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு மற்றும் சின்னம் தொடர்பான விவகாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்திற்குப் பதிலாக பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட விரும்புவது அக்கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனிடம் குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலாவது அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. இருப்பினும், அந்தக் கோரிக்கையை ஜி.கே.வாசன் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமாகா சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களும் தாமரைச் சின்னத்திலேயே களம் காண்பார்கள் எனத் தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற முக்கியத் தலைவர்களான: ஜான் பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்), ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி), கே.சி.திருமாறன் ஆகியோர் வரும் தேர்தலில் பாஜகவின் ‘தாமரை’ சின்னத்திலேயே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போதைய நிலவரப்படி, பாஜக நேரடியாகப் போட்டியிடும் 27 தொகுதிகள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடக் கோரும் 5 தொகுதிகள் என மொத்தம் 32 இடங்களில் தாமரைச் சின்னம் களம் காண்பது உறுதியாகியுள்ளது.
கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அதிமுகவின் பிரதான சின்னமான இரட்டை இலையைத் தவிர்த்துவிட்டு, தாமரைச் சின்னத்தை நோக்கிச் செல்வது அதிமுக வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இது எதிர்வரும் தேர்தலில் வாக்குகளைப் பிரிக்குமா அல்லது பலம் சேர்க்குமா என்ற கணக்கீடுகளில் அரசியல் நோக்கர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று இந்திய ஜனநாயக கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பது குறித்து இன்று மதியம் அறிவிப்பதாக பாரிவேந்தன் தெரிவித்துள்ளார். இவர் இரட்டை இலை சின்னமா அல்லது தாமரையா என்று இன்னும் முடிவு செய்யாத நிலையில் ஒருவேளை தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் பாஜகவுக்கு கிட்டத்தட்ட 37 தொகுதிகள் என்பது போல் ஆகிவிடுகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.
