மத்தியப் பிரதேச மாநிலத்தில் தன் தாய்க்கு நேர்ந்த கொடுமையைத் தாங்க முடியாமல் 17 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயலில் வேலை செய்துகொண்டிருந்த அந்தப் பெண்ணை சுனில் மாளவியா என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து புகார் அளிக்கப் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையம் சென்றபோது, பெண் அதிகாரி இல்லை என்ற காரணத்தைக் கூறி போலீசார் வழக்குப் பதிவு செய்யத் தாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.தன் தாய்க்கு நேர்ந்த அநீதிக்கும், போலீசாரின் அலட்சியப் போக்கிற்கும் நீதி கிடைக்காததை எண்ணி மனமுடைந்த அந்தப் பெண்ணின் மகன், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அந்தச் சிறுவன் உயிரிழந்தான். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியதை அடுத்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் சிறுவனின் உடலைச் சாலையில் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளியின் வீட்டின் மீது கல்வீசித் தாக்கி, அவரது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர்.

நிலைமை மோசமடைவதைக் கண்ட போலீசார், உடனடியாகக் குற்றவாளி சுனில் மாளவியாவைக் கைது செய்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்யத் தாமதம் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்று உயர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். தற்போது அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.