பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பார் (Barh) ரயில் நிலையத்தில், வந்தே பாரத் ரயிலின் வேகத்தை உணராமல் ஒரு நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இந்த நிலையத்தில் நிற்காமல் அதிவேகத்தில் கடந்து செல்லும்.
அப்போது பிளாட்பாரத்தின் ஓரத்தில் நின்றிருந்த ஒரு நபர், ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தை நோக்கி புகையிலை துப்ப முயன்றுள்ளார். ரயில் ஓட்டுநர் தூரத்திலிருந்தே தொடர்ந்து அபாயச் சங்கு (Horn) ஒலித்த போதிலும், அந்த நபர் தனது கவனக்குறைவால் அதைக் கேட்கவில்லை.
கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் வந்த ரயில் அந்த நபர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு உயிருக்குப் போராடிய அவரை மீட்டு பாட்னா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த ரத்தத்தை உறைய வைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, ரயில் பயணிகளிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
