வீட்டு உபயோகச் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எடையைக் குறைக்கும் திட்டம் ஏதுமில்லை என்றும், இது தொடர்பாகப் பரவி வரும் செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகளே என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இதனைச் சமாளிக்க, எண்ணெய் நிறுவனங்கள் தற்போதுள்ள 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் எடையை 10 கிலோவாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தில் மாற்றங்கள் இருந்த நிலையில், இந்தச் செய்தி பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “சிலிண்டரின் எடையைக் குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை. பரப்பப்படும் செய்திகள் யாவும் வெறும் ஊகங்களே. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில் போதிய இருப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை,” என்று உறுதிப்படத் தெரிவித்தார்.
மேலும் நாடு முழுவதும் தற்போது புழக்கத்தில் உள்ள 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் விநியோகம் எந்த மாற்றமும் இன்றி வழக்கம் போலவே தொடரும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்மையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில், எடையைக் குறைக்கும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
