ஆந்திரா மாநிலம் அல்லூருபாடு பகுதியைச் சேர்ந்த 55 வயதான வெங்கடேஷ் வர்லு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். முதலில் கம்மத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குப் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் விஜயவாடாவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவருக்குப் பொருத்தப்பட்டுள்ள ஆக்ஸிஜன் கருவியை அகற்றினால் அவர் உயிரிழந்து விடுவார் என்றும் அவர் இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவர் இறந்துவிடுவார் என்று கருதி நேற்று காலை இறுதிச் சடங்குகளைச் செய்ய முடிவெடுத்து உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அல்லூருபாடுவில் உள்ள வெங்கடேஷ் வர்லுவின் வீட்டிற்கு உறவினர்கள் அனைவரும் காலையிலேயே திரண்டு வந்தனர்.
வீட்டின் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. உடலை வைப்பதற்கான குளிர்சாதனப் பெட்டியும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. காலை பத்து மணியளவில் வெங்கடேஷ் வர்லு ஆம்புலன்ஸ் மூலம் கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டார். அப்போது அவர் இன்னும் உயிருடன் இருப்பதை நேரில் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உயிருடன் இருக்கும் ஒருவரை எப்படி இவ்வாறு அழைத்து வரலாம் என்று அவர்கள் குடும்பத்தினரிடம் கேள்வி எழுப்பியதால் அங்கு திடீர் தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பெரியவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
உயிருடன் இருந்த வெங்கடேஷ் வர்லுவை மீண்டும் சிகிச்சைக்காக அதே ஆம்புலன்ஸில் விஜயவாடா மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முயன்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் மீண்டும் கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் இறுதிச் சடங்குகள் செய்து முடிக்கப்பட்டன.
உயிருடன் இருந்தவரைச் சடலமாகக் கொண்டு வந்த விவகாரமும் அதைத் தொடர்ந்து அவர் பாதியிலேயே உயிரிழந்த சம்பவமும் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
