இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், சமீபத்தில் ஹார்மோன் மாற்று சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது பெயரை அனயா என்று மாற்றிக்கொண்ட அவர், தற்போது தாய்லாந்தில் பாலின உறுதி அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக முடித்து முழுமையான பெண்ணாக மாறியுள்ளார்.

தனது மாற்றத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனயா, இந்த கடினமான பயணத்தில் தனது குடும்பத்தினர் தனக்கு பெரிய பலமாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் இந்த மாற்றம் அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை என்றும், ஆரம்பத்தில் தன்னைப் புரிந்துகொள்ள குடும்பத்தினருக்குச் சற்று கால அவகாசம் தேவைப்பட்டதாகவும் அனயா குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கத்தில் பல குழப்பங்களும் கேள்விகளும் இருந்தாலும், காலப்போக்கில் அவர்கள் அனைவரும் அனயாவின் உணர்வுகளை ஏற்றுக்கொண்டு உறுதுணையாக நின்றனர். குறிப்பாக, இந்த அறுவை சிகிச்சையின் போது தனது தந்தை சஞ்சய் பங்கர் அருகில் இருந்து ஆதரவு கொடுத்தது தனக்கு மிகப்பெரிய தைரியத்தை அளித்ததாக அவர் கூறியுள்ளார்.தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அனயா, “என் தந்தையின் ஆதரவு ஒரே இரவில் கிடைத்துவிடவில்லை, ஆனால் அது கிடைத்தபோது மிகவும் உண்மையானதாகவும் உறுதியானதாகவும் இருந்தது” என பதிவிட்டுள்ளார்.

தனது வாழ்வின் மிக முக்கியமான தருணத்தில் தந்தை உடனிருந்தது இந்த மாற்றத்தைச் சாத்தியமாக்கியதாக அவர் உருக்கமாகப் பேசியுள்ளார். சமூக வலைதளங்களில் அனயாவின் இந்த துணிச்சலான முடிவிற்குப் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.