நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஒட்டுமொத்தமாக 776 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். அத்துடன் தொடரின் சிறந்த வீரருக்கான ‘ஆரஞ்சு கேப்’ உள்பட 5 முக்கிய விருதுகளையும் வென்று கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். இத்தகைய அசாத்திய திறமையைக் கண்டு வியந்துள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், வைபவ் சூர்யவன்ஷியை இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து என்று வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

மேலும், அவர் ஒரு தனித்துவமான, அதிசயமான வீரர் என்றும், தற்போது தென் ஆப்பிரிக்காவில் 14 அல்லது 15 வயதில் இவரைப் போன்ற திறமையான வீரர் எவரும் இல்லை என்றும் ஸ்டெயின் புகழாரம் சூட்டியுள்ளார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரை விட, வைபவ் தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதியில் மிகப்பெரிய உயரத்தை எட்ட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் அதிரடியாகக் கணித்துள்ளார்.
இருப்பினும், இந்த இளம் வயதிலேயே இவருக்குக் கிடைக்கும் அதீத புகழும் பொறுப்புகளும் அவரது திறமையை வீணாக்கிவிடக் கூடாது என்பதில் இந்திய அணி நிர்வாகம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஸ்டெயின் எச்சரித்துள்ளார்.

ஆரம்பக் கட்டத்திலேயே இவரை மிகுந்த கவனத்துடன் கையாண்டு, சரியாகப் பாதுகாக்கவில்லை என்றால், அவருக்குக் கிடைக்கும் நல்வாய்ப்புகளை அவர் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சர்வதேச அரங்கில் அவரது திறமையை சோதிக்க மற்ற அணிகள் நிச்சயம் வியூகம் வகுக்கும் என்று கூறிய ஸ்டெயின், ககிசோ ரபாடா எப்படி தனது அசுர வேகப்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களைத் தாக்குகிறாரோ, அதுபோல சூர்யவன்ஷியையும் வேகமான மற்றும் பவுன்ஸ் பந்துகள் மூலம் எதிரணிகள் சோதிக்கலாம் என்றும், அவர் இன்னும் சிறுவன் என்பதால் பவுன்சர் பந்துகளை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே அவரது அடுத்தகட்ட வெற்றிக்கு முக்கியமாக இருக்கும் என்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.