19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ‘ரோர் 26’ (Roar 26) என்ற பிரம்மாண்ட ரசிகர்கள் திருவிழா நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட தற்போதைய வீரர்களுடன், சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், பிராவோ, முரளிதரன் போன்ற முன்னாள் நட்சத்திர வீரர்களும் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
மஞ்சள் உடையில் திரண்டிருந்த சுமார் 23 ஆயிரம் ரசிகர்கள், தங்கள் அபிமான வீரர்கள் மீண்டும் மைதானத்தில் ஒன்றாக இணைந்ததைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.இந்த விழாவின் ஒரு பகுதியாக முன்னாள் வீரர்கள் பங்கேற்ற ஜாலியான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஹஸ்சி சிக்சர் அடித்து அசத்த, தோனி விக்கெட் கீப்பராக இருந்து வீரர்களை கிண்டல் செய்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
குறிப்பாக, பிராவோவை ஸ்டம்பிங் செய்வது போல அவர் செய்த சேட்டை மைதானத்தையே சிரிக்க வைத்தது. மேலும், சமீபத்தில் உலகக்கோப்பை வென்ற சஞ்சு சாம்சன், ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் வீரர்களுடன் கலந்துரையாடி நிகழ்ச்சியை இன்னும் சுவாரசியமாக்கினார்.நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இசைக்கச்சேரி நடைபெற்றது, இது ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர வைத்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, சென்னை அணியின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் சுரேஷ் ரெய்னா மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோரின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன. தோனி மற்றும் ஏ.ஆர். ரகுமான் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த வண்ணமயமான விழா, ஐ.பி.எல் தொடருக்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
