சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சி.எஸ்.கே ரசிகர்களுக்காக ‘ரோர்26’ என்ற பிரம்மாண்ட திருவிழா நடைபெற்றது. இதில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தோனி உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் அதிரடியான இசைக்கச்சேரி அரங்கேறியது. சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த கண்கவர் நிகழ்ச்சியை, மஞ்சள் சீருடை அணிந்த 23 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டு உற்சாகமடைந்தனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், தோனியுடன் மேடையில் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “தோனி, உங்களை தொலைக்காட்சியிலும் கேலரியில் இருந்தும் பார்த்திருக்கிறேன், ஆனால் இப்போது இவ்வளவு அருகில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் சேப்பாக்கத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் வசிக்கிறேன், ஆனால் ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரம் என் வீடு வரை கேட்கிறது.

சி.எஸ்.கே என்பது வெறும் அணியல்ல, அது ஒரு உணர்வு,” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து தோனியின் ஓய்வு குறித்துப் பேசிய சிவகார்த்திகேயன், “நீங்கள் 60 வயது வரை தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்றார். அதற்குப் பதிலளித்த தோனி, “வயதாகி வருவதால் உடல் தகுதியைத் தக்கவைப்பது கடினமாக உள்ளது,” எனக் குறிப்பிட்டார்.

இருப்பினும், சிவகார்த்திகேயன் நீங்கள் இன்னும் கட்டுக்கோப்பாகவே இருக்கிறீர்கள் என்று ஊக்கப்படுத்தியதும், “நிச்சயமாக அதற்காக முயற்சி செய்கிறேன்,” என தோனி புன்னகையுடன் உறுதியளித்தார்.