ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக எந்த ஒரு முஸ்லிம் நாடும் நேரடியாகக் களமிறங்காதது உலக அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஈரானுக்கு தார்மீக ஆதரவை வழங்கினாலும், முஸ்லிம் நாடுகள் இந்த விவகாரத்தில் இன்னும் மௌனம் காத்தே வருகின்றன.

இந்தச் சூழலில், தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து ‘இஸ்லாமிய நேட்டோ’ போன்ற ஒரு ராணுவக் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

சமீபத்தில் ரியாத்தில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், பிராந்தியப் பிரச்சினைகளைத் தீர்க்க தங்கள் நாடுகளின் ராணுவ பலத்தை ஒன்றிணைப்பது குறித்து வெளியுறவு அமைச்சர்கள் விவாதித்தனர்.

இந்தக் கூட்டணியில் பாகிஸ்தானையும் இணைக்க துருக்கி ஆர்வம் காட்டி வருகிறது. துருக்கியின் நவீன ட்ரோன் தொழில்நுட்பம், பாகிஸ்தானின் அணு ஆயுத பலம் மற்றும் சவூதி அரேபியாவின் நிதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஒன்றிணைப்பதன் மூலம் ஒரு வலிமையான பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதால், சவூதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ள பாகிஸ்தான் போன்ற நாடுகள், விருப்பமில்லாவிட்டாலும் இந்தப் போருக்குள் இழுக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், இந்த நாடுகள் தங்களுக்குள் ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுத்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.