பொருளாதாரம் மற்றும் அமைதி மையம் உலகளவில் 163 நாடுகளில் பயங்கரவாத தாக்கம் குறித்து நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் மிகவும் கவலைக்குரிய முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் நிலவும் சுமுகமற்ற உறவு மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைகள் காரணமாக பாகிஸ்தான் இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புச் சூழலும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
குறிப்பாக 2013-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் பயங்கரவாதம் தொடர்பான உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் சுமார் 1,045 பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,139 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது அந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை வெகுவாகப் பாதித்துள்ளது.இந்த வன்முறைகளுக்கு முக்கியக் காரணமாக ‘தெஹ்ரீக்-இ-தலிபான்’அமைப்பு உள்ளது.
இது உலக அளவில் மூன்றாவது கொடிய பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்துள்ளதுடன், பாகிஸ்தானில் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் உலக அளவில் செயல்பட்ட மிகப்பெரிய நான்கு பயங்கரவாத அமைப்புகளில், தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய ஒரே அமைப்பாகவும் இது இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
