பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பிரீமியம் வகை பெட்ரோல் வாகன இன்ஜின்களின் அதிவேக செயல்பாட்டிற்கும் எரிசக்தி சேமிப்பிற்கும் பெரிதும் உதவுகிறது. இந்த வகை பெட்ரோல் இன்ஜின்களில் படியும் தேவையற்ற கார்பன் துகள்களை அகற்றி அவற்றின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதுடன் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதையும் தடுக்கிறது.
இதன் காரணமாகப் பல வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு இந்த வகை பெட்ரோலை விரும்பிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சீனா மற்றும் இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளில் எரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சர்வதேசச் சூழலைக் கருத்தில் கொண்டு பிரீமியம் வகை பெட்ரோல் விலையை மட்டும் லிட்டருக்கு இரண்டு ரூபாய் முப்பத்தைந்து பைசா உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தங்களது விநியோகஸ்தர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிக்கை அனுப்பியுள்ளது. இந்த விலை உயர்வு குறித்துப் பஞ்சாப் மாநில பெட்ரோல் பங்க் சங்கத் தலைவர் அர்ஷ்விந்தர் மோங்கியோ கூறுகையில் 105 ரூபாய் 16 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் பெட்ரோல் இனி 107 ரூபாய் 13 பைசாவிற்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லையென்றாலும் பிரீமியம் பெட்ரோல் விலை உயர்வு அதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
