ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் முன்பு மேற்கு கோதாவரி போலவரம் பகுதி சிந்தூர் அருகே உள்ள கூடூர் கிராம மக்கள், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுத்துள்ள அதிரடி முடிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் தரம் குறைந்த மூலப்பொருட்கள் மற்றும் கண்டறியப்படாத ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்களை உண்பதால் குழந்தைகளுக்குப் பல் பாதிப்புகள் மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதாகக் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, வெளியூர்களில் இருந்து வரும் ஐஸ்கிரீம் வாகனங்கள் கிராமத்திற்குள் நுழையக் கிராம சபை சார்பில் அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை அறிவிக்கும் வகையில் கிராமத்தின் நுழைவு வாயிலிலேயே பெரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பேனரில், தடையை மீறி கிராமத்திற்குள் நுழையும் ஐஸ்கிரீம் வாகனங்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தைகளின் வருங்கால நலனைக் கருதி எடுக்கப்பட்ட இந்த முயற்சி மட்டுமன்றி, அண்மையில் இந்தக் கிராமத்தின் அருகே இருந்த மதுக்கடையையும் கிராம மக்கள் ஒன்றிணைந்து அப்புறப்படுத்தியுள்ளனர். சமூக நலன் சார்ந்த கூடூர் கிராம மக்களின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் அண்டை கிராமத்தினரிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன.
