தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் வெளியிட்டார். சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், மாநில சுயாட்சி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பல்வேறு அதிரடி வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தின் நிர்வாக வசதிக்காக ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி:
-
திருச்சி: நிர்வாகத் தலைநகராகச் செயல்படும்.
-
கோவை: வணிகத் தலைநகராக மாற்றப்படும்.
-
கன்னியாகுமரி: மெய்யியல் தலைநகராகத் திகழும்.
-
மேலும் இரண்டு நகரங்கள் முறையே கலை மற்றும் கல்வி சார்ந்து தலைநகரங்களாகத் தரம் உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையின் மிக முக்கியமான அம்சமாக, தற்போது நடைமுறையில் உள்ள சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என சீமான் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக, ‘தமிழ் குடிமக்கள்’ என்ற அடிப்படையில் புதிய இடஒதுக்கீடு முறை அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு பெண்கள் நலன் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு எனத் தனித் தொகுதிகளைப் போராடிப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். மாநில சுயாட்சி ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவம் உறுதி செய்யப்படும். ரயில்வே நிர்வாகம் தமிழக எல்லைக்குள் இயங்கும் ரயில்வே நிர்வாகத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்.
அதோடு தமிழகத்தின் நீர்நிலைகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். வேளாண்மை மற்றும் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். இந்தத் தேர்தல் அறிக்கை தமிழக அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. மேலும் 49 தலைப்புகளில் 462 பக்க தேர்தல் அறிக்கைகளை சீமான் வெளியிட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மது கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும், குடிநீர் விற்பனை தடுக்கப்பட்ட அனைவருக்கும் இலவச குடிநீர் வழங்கப்படும் எனவும், ஆங்கில மருத்துவம் தமிழ் வழியில் நடத்தப்படும் எனவும், தமிழ் தாய் பாடலுக்கு பாரதிதாசனின் வாழ்வின் செம்மையை பாடல் மாற்றப்படும் என்றும் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
