மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இளைஞர் ஒருவர் குளிப்பதற்குத் தண்ணீர் சூடாக்கப் பயன்படும் ஹீட்டர் மூலம் குழம்பு சமைக்கும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் விறகு அடுப்பு மற்றும் இண்டக்ஷன் அடுப்புகளுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில், ஹிமான்க் வாசுதேவா என்ற திட்ட மேலாளர் (Project Manager), தனது வீட்டில் எரிவாயு தீர்ந்துவிட்டதால், யாரும் எதிர்பாராத ஒரு ‘டெக்னாலஜி’யைப் பயன்படுத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு பாத்திரத்தில் காய்கறிகள் வெந்து கொண்டிருக்கும்போது, அதன் நடுவே தண்ணீர் சூடாக்கும் மின்சார ஹீட்டர் ராடை வைத்துச் சமைக்கிறார். “கேஸ் காலி.. ஹீட்டர் ஆன்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 2.2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Himank Vasudeva (@vasudevahimank)

இந்த வினோத முயற்சியைக் கண்ட இணையவாசிகள் பலர், “இண்டக்ஷன் அடுப்பு கண்டுபிடிப்பதற்கு முன்னால் மக்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது” என்றும், “நிமிடங்களில் முடிய வேண்டிய வேலை மணிநேரக் கணக்காகும்” என்றும் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வேடிக்கை ஒருபுறம் இருந்தாலும், இத்தகைய செயல் உயிருக்கே ஆபத்தானது எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். சமையல் பாத்திரங்கள் உலோகத்தால் ஆனவை என்பதால், மின்சாரக் கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிட வாய்ப்புள்ளது. தண்ணீர் சூடாக்கும் ராடுகள் உணவு சமைக்க வடிவமைக்கப்பட்டவை அல்ல. அதிக வெப்பத்தில் இவை வேதிவினைகளை ஏற்படுத்தி உணவை நச்சாக மாற்றக்கூடும். இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். மேலும் “ஆபத்தான இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதை விட, பழங்கால முறைப்படி விறகு அடுப்புகளைப் பயன்படுத்துவதே சிறந்தது” எனப் பல பயனர்கள் அந்த இளைஞருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.