கடந்த சில நாட்களாக எல்லைப் பகுதியில் கடும் மோதலில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள், புனித ரம்ஜான் மாதத்தின் நிறைவு மற்றும் ஈத் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்களுக்குத் தற்காலிகப் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பொதுமக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது.
இந்நிலையில், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இரு நாடுகளும் போரைத் தற்காலிகமாக நிறுத்தச் சம்மதித்துள்ளன. இந்த போர்நிறுத்தம் வியாழக்கிழமை அதிகாலை முதல் திங்கட்கிழமை நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இரு நாடுகளும் பரஸ்பரம் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. அதாவது ஆப்கானிஸ்தான் “அநீதிக்கு எதிரான எங்களது தற்காப்பு நடவடிக்கைகளை மட்டுமே தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்,” எனத் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான “மனிதாபிமான அடிப்படையில் இந்தப் போர்நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளோம். ஆனால், எல்லைக்கப்பால் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்,” என பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அதாவுல்லா தரார் எச்சரித்துள்ளார்.
போர்நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, வட வஜிரிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள குலாம் கான் சோதனைச் சாவடியில் ஆப்கானிஸ்தான் தரப்பிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். இதற்குப் பாகிஸ்தான் ராணுவம் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதால் எல்லையில் பதற்றமான அமைதி நிலவுகிறது.
மேலும் பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் ‘தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ (TTP) அமைப்புக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அடைக்கலம் கொடுத்து வருவதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டைத் தலிபான் அரசு தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
